சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்து கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசன் என்பவர் change.org என்ற பிரபல கையெழுத்து இயக்க இணையத்தளம் மூலம் இக்கோரிக்கையை வைத்துள்ளார். ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தை ஆளும் உரிமையை சசிகலாவுக்கு கொடுக்க கூடாது என்பது இவரது முக்கிய கோரிக்கை. இக்கோரிக்கை மனுவுக்கு இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இதனால் சசிகலா, தமிழக முதல்வர் ஆவதற்கு பாரிய சிக்கல் ஏற்படக்கூடும் எனவும் தமிழகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

பதில் சட்டமா அதிபரை பதவி நீக்கிய ட்ரம்ப்!

அமெரிக்காவில் அகதிகளை அனுமதிக்க மறுக்கும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த பதில் சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20ஆம் திகதி பதவியேற்ற நாள் முதல் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் உள்நாட்டுப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டு சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவிற்கு வருவதற்கு காலவரையற்ற தடை விதித்துள்ளார்.

மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 07 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விஸா வழங்குவதை 03 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், ட்ரம்பின் உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளன.

இந்நிலையில் அந்நாட்டின் பதில் சட்டமா அதிபர் சாலி யேட்ஸ், நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், ட்ரம்பின் முடிவை ஏற்க முடியாது, இதற்காக வாதாடக் கூடாதெனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேலும், ஒபாமா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட சாலி யேட்ஸ், ட்ரம்ப் உத்தரவிற்கு எதிரான சட்டரீதியிலான சவால்களை எதிர்க்க முடியாதென அறிவித்து நீதித்துறைக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நுளம்புத் தொல்லை நீங்க புதிய வழிமுறை!

நுளம்புகளிடமிருந்து எம்மைப் பாதுகாத்து கொள்வதற்கான எளிய வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஆய்வுக்குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.

ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதனை தமது ஆடைகளில் ஒட்டி கொண்ட பின்னர் நுளம்புகள் கொட்டுவதை தவிர்ப்பதாகவும், குறித்த ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதிலிருந்து வெளியேறும் இரசாயனம் காரணமாக நுளம்புகளுக்கு மனிதர்களின் வாசனையை அறிந்துகொள்ள முடியாது எனவும், இதனால் மனித உடலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனவும் அந்த ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

விஷேடமாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கான சரியான தீர்வு இதன்மூலம் கிடைக்கப் பெறலாமென எதிர்பார்ப்பதுடன், விரைவில் இது சந்தைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் குறித்த ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா – மெக்சிக்கோ பனிப்போர்!

அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் 2000 மைல் நீளத்துக்கு பாரிய தடுப்பு சுவர் ஒன்றை அமைக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்று உத்தரவைப் பிறப்பித்திருந்ததுடன், இந்த சுவருக்கான செலவினை மெக்சிக்கோவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். எனினும் இந்த செலவினத்தை பொறுப்பேற்க மெக்சிகோவின் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் அவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தின் போது, தம்மை சந்திக்க வேண்டாமென ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மெக்சிக்கோவின் ஜனாதிபதி தமது அமெரிக்க விஜயத்தை இரத்து செய்துள்ளார். தற்போது மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விஷேட வரி ஒன்றை விதித்து, அதனை எல்லைச் சுவர் அமைக்க பயன்படுத்திக்கொள்ள டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சோமாலியாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சோமாலியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.

சோமாலியாவின் தலைநகர் மகடிசுவிலுள்ள விடுதி ஒன்றில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை, ஐ.எஸ். தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்பின் அதிரடி உத்தரவு!

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் கடக்க முடியாத திண்ம தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான நிறைவேற்று உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

இந்த எல்லை தடுப்பு சுவருக்கான நிதியை, மெக்சிக்கோ மீள வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2000 மைல் நீளத்துக்கு அமைக்கப்படவுள்ள இந்த சுவருக்காக பல பில்லியன் டொலர்கள் தேவைக்கப்படுவதாகவும், இதற்கான நிதி ஒதுக்கத்துக்கு காங்கிரஸ் சபை அங்கீகாரம் வழங்க வேண்டியது முக்கியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சஹாரா பாலைவனம் தொடர்பில் வெளியான உண்மை!

11,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்ததென புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமான ஆபிரிக்க கண்டத்திலுள்ள சஹாரா பாலைவனம் அதிக வெப்பம் கொண்ட பாலைவனமாகும். ஆனால் இந்த பாலைவனம் 5000 முதல் 11000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருப்பதை விட 10 மடங்கு பசுமையாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது. அந்த கால கட்டத்தில் அங்கு அதிகமான மழை பொழிவு இருந்தது. அப்பகுதி முழுவதும் பசுமையாக இருந்ததால் மக்கள் அதிகளவில் குடியிருந்தனர். கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகவும் இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கால்நடைகளும் பெருமளவில் வளர்க்கப்பட்டன. ஆனால் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் வரட்சி பிடியில் சிக்கியது. 1,000 ஆண்டுகள் படிப்படியாக வரண்டு வெப்பம் மிகுந்த பாலைவனமாக மாறியதாக இந்த தகவல் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனாவிலுள்ள ஜெசிகா டயர்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சஹாரா பாலைவனம் பகுதியில் பெய்த மழை அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இத்தகைய தகவல் தெரிய வந்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக சஹாரா படிப்படியாக பாலைவனமாக மாறி இருக்கலாம் என்றும், அகழ்வாராய்ச்சி மூலம் இங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதும் அறியப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் – ட்ரம்ப் ஆவேசம்

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார். தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்டவிதம் குறித்து பாராட்டினார்.

இந்த ஜனவரி 20ஆம் திகதி, பொதுமக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூறப்படும் எனவும், தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்றும், ஆனால் இந்த பணியை நிறைவேற்றவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் இலாபமளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெல்போர்னில் வாகன விபத்து – மூவர் பலி!

அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் மீது மோதுண்டதில் 03 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். வேக கட்டுப்பாட்டை மீறியமையே இந்த அனர்த்தத்திற்கான காரணமென கண்டறியப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை விக்டோரியா பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு!

45ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று (20) பதவி ஏற்கவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட, டொனால்ட் டிரம்ப் தனது 70ஆவது வயதில் இன்று வாஷிங்டனில் பதவி ஏற்கவுள்ளார். மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம் என்ற தொனிப்பொருளில் அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பதவிக் காலத்தின் போது இறுதி முறையாக நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். இதன்போது மத்திய கிழக்கின் இரு மாநிலங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தாம் பெரிதும் அச்சமடைவதாக தெரிவித்துள்ளதுடன், ஐ.நா சபையின் தீர்மானம் தொடர்பில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் விழிப்பாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்தி உறுதிமொழி எடுக்கவுள்ளதாகவும், டிரம்ப் பதவியேற்பு விழாவினையொட்டி அமெரிக்காவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுவரும் நிலையில், டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி, அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருவதாகவும் சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.