தமிழர் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத டக்ளஸ் எம்.பியின் பெயர்!

தமிழ் வரலாற்றுப்பாட புத்தகங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டுமிருப்பதாகவும் அதிகாரிகள் இது விடயத்தில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் பாராளுமன்றத்தில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியால் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும் என்ற வகையில், டக்ளஸ் தேவானந்தா சபையில் எழுப்பிய கேள்வி வரவேற்கப்பட வேண்டியதே.

இன்றைய காலகட்டத்தில்கூட சிறுபான்மை இனத்தவர்களின் வரலாறுகள் அழிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எம்மக்கள் மத்தியில் நிலவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில், 2017ம் ஆண்டுக்கான இலவச பாடநூல்களில் தரம் 6,7,8.9,10 என்பவற்றுக்கான வரலாற்றுப் புத்தகங்களில் தமிழ் பேசும் சமூகங்களின் வரலாறுகள் புறக்கணிப்புச் செய்யப்பட்டிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சுமத்தியதுடன், உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் துரிதமாகச் செயற்பட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்டோர் தலைமையில் தமிழ் அறிஞர்கள், விரிவுரையாளர்கள், உயரதிகாரிகளின் பங்களிப்புடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி, தமிழ்ப் பாடநூல் ஆக்கப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் அதிகாரிகள், நூல் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பவர்களாக இல்லாமல் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்புச் செய்கின்றவர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்புநோக்குச் செய்கின்றவர்களாகவுமே கடமையாற்ற முடிகின்றதாலும், துறைசார்ந்தவர்கள் போதுமான வகையில் அங்கு கடமையில் அமர்த்தப்படாததுமே இவ்வாறான தவறுகளுக்கும், புறக்கணிப்புக்களுக்கும் காரணம் என்னவென ஆராயப்பட்டதுடன், அந்தக் குறைபாடு அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களை தயாரிக்கும் பொருட்டு பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர்களுக்கு எழுத்து மூலம் பாடவிதானம் தொடர்பில் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்கப்பட்ட போதிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது ஒத்துழைப்போ பங்களிப்போ கிட்டவில்லையென கல்வித் திணைக்கள அதிகாரிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இனங்களின் வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாளை இந்த நாட்டில் பிறந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களை வரலாறு இல்லாத சமூகங்களாக திரிபுபடுத்தும் தீயசக்திகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் துணை போகக்கூடியதாக அமைத்து விடலாம்.

அந்த வகையில் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் சமுகங்கள் எதிர்நோக்கவிருந்த வரலாறில்லாத சமுகம் என்ற அவச்சொல்லிலிருந்து மீட்டெடுப்பதற்கான பெரும் கைங்கரியத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா செய்துள்ளதுடன், தமிழ் பேசும் சமூகத்தின் மீதான தனது கடமையும், தமிழர்களுக்கான சிறந்ததொரு முகவரியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பையும் அவர் சரிவரச் செய்திருக்கின்றார். இந்த விடயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் சமயோசித நடவடிக்கைகளும் பாராட்டப்பட வேண்டும்.

பாடசாலைகளில்தான் எமது எதிர்கால பரம்பரைக்கு எமது வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும். அதனைச் செய்யத் தவறினால் அவர்கள் வரலாற்றில்லாத சமூகங்களாக, எடுப்பார் கைப்பிள்ளைகளாக, நாடற்றவர்களாகக்கூட ஆகிவிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் எனவே, இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இனிமேலாவது கண்விழிக்க வேண்டும்.

விடுதலைப் புலித் தலைமையால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த அரசாங்கத்தால் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழ் மக்களின் கையறுநிலையை சாதகமாகப் பயன்படுத்தி ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமது பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர்.

குறிப்பாக, கடந்தகால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, உறவுகளை, உடமைகளை இழந்த நிலையில் வாழ்ந்து வந்த மக்களிடம், உறவுகளை மீட்டுத் தருகின்றோம், அரசியல் உரிமையைப் பெற்றுத் தருகின்றோம், மக்களின் சொந்த நிலங்களை மீட்டு, மீள்குடியேற்றுகின்றோமென பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், இவற்றில் எந்தவொரு விடயத்தையும் இன்று வரை நிறைவேற்றவில்லை. மாறாக இன்று பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வைப் பெற்றுக் கொள்வது என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய காலச்சூழலை எடுத்துக்கொண்டால், தற்போது ஆட்சியிலுள்ள இந்த அரசாங்கத்தைத் தாமே கொண்டு வந்ததாகத் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் போன்ற பதவிகளையும் இவர்கள் வகித்து வருகின்ற போதிலும், தமிழ் மக்களின் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் மென்மையானதொரு பார்வையைச் செலுத்தி வருகின்ற நிலையில், தமிழர் விடயத்தில் எந்தவித முன்னகர்வுகளையும் மேற்கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளின் செயற்பாடுகள் இவ்வாறாக இருந்தாலும், தமிழ் மக்கள் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை சரியாகப் புரிந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துவரும் முயற்சிகள் கவனிக்கப்பட வேண்டியவையே.

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான அடையாளத்தை வழங்கி, உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அவரின் பங்களிப்பு மிகமுக்கியமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் மன்னர்களின் வரலாற்றை எமது இளம் சந்ததியினரும், எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்வதற்காக மன்னர்களின் சிலைகளை யாழ். நகரில் நிறுவியுள்ளதுடன், இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களின் பெரும் பகுதிகளை விடுவிப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு, குறித்த காணிகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததில் டக்ளஸ் தேவானந்தாவின் பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்திருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.

இன்று வரலாற்றுப்படப் புத்தகத்தில் தமிழர் வரலாறுகளை உள்ளடக்கி, தமிழர்களுக்கான அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை என்பது டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சிகளுக்கான அங்கீகாரமே.

இதேபோன்று, நாளைய எதிர்காலத்தில் எமது இளைய சந்ததியினர் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதை வலியுறுத்துகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகலே தமிழ் மக்கள் பேரவை

தமிழர்களின் பிரச்சினைகளைக் குழப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் நிலையில், அதே பணியை மேலும் தனித்துவமாக மேற்கொள்வதற்கே தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களது பிரச்சினைகள் நாட்டின் ஏனைய இன மக்களினதும் பிரச்சினைகளைப் பார்க்க வேறுபட்டதாகவே காணப்படுகின்றன.

யுத்தம் நிலவிய காலகட்டத்திலும் அதற்கு முன்பும், தமிழ் மக்கள், நாட்டின் அபிவிருத்திப் பணிகள் உட்பட பல்வேறு சலுகைகளில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்கள் பல்வேறு அபிவிருத்திகளை கண்டுள்ள போதிலும் தமிழர்களது உணர்வுப்பூர்வமான அபிலாஷைகள் நிறைவேற்றப்படாத நிலையே தொடர்கின்றது.

18.12-495x264

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அம் மக்களின் அரசாங்க பிரதிநிதிகள் அம் மக்களின் தேவைகளை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்தும், அவர்கள் தம் பகுதிகளை அபிவிருத்தி செய்தும் வருகின்ற நிலையில் தமிழர் தரப்பு அரசியல் பிரதிநிதிகளில் மக்களின் தேவைகள், பிரதேச அபிவிருத்திகளை மேற்கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தாவைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற கணிப்பே மேலோங்கியிருக்கிறது.

மேலும் யுத்தப் பாதிப்புகளில் இருந்து தமிழர்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையே காணப்படுகின்றது. அத்துடன், அங்கவீனங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், இடம் பெயர்ந்துள்ள மக்கள் மீளக் குடியேற்றப்படாமை, அரசியல் கைதிகள், மீளக் குடியேற்றப்பட்டோருக்கான அடிப்படை வசதிகளின்மை, வேலை வாய்ப்பின்மை, கடல் தொழில் ரீதியில் அத்துமீறல்கள், இந்திய மீனவர்களாலான பாதிப்புக்கள் என தமிழர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் ஏராளம். இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரையில் எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் எதுவும் கிடையாது.

மாகாண சபைக்கு அதிகாரமில்லை என தொடர்ந்து கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது அதற்குள்ள அதிகாரங்களின் கீழ் மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதியைக்கூட மக்களுக்காக செலவு செய்ய திறனற்ற நிலையில் இருப்பதையே தொடர்ந்து காணக்கூடியதாக உள்ளது.

இந்த அதிகாரங்களைக் கொண்டியங்கும் நாட்டின் ஏனைய மாகாண சபைகள் அம் மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

TNA-MPs_95650_445

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தீர்வு பற்றி பார்க்கும் போது அது பற்றி நாளாந்தம் பல்வேறு கதைகளைக் கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இதுவரையில் எவ்விதமான தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காத நிலையே காணப்படுகின்றது. தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் குழப்பிக் கொண்டே, அதற்கான தீர்வுகளை எட்டுவதற்கான இடைவெளியை அதிகரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உண்மையிலேயே இதய சுத்தியுடன் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து எண்ணிப் பார்க்காத நிலையே தொடர்கிறது. மறுபக்கம் பார்க்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தேர்தலுக்கான, சிங்கள எதிர்ப்புவாத அமைப்பே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய, தமிழர்கள் நலன் சார்ந்த அமைப்பு அல்ல என்ற வகையிலேயே அது இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழர்களது பிரச்சினைகளத் தீர்க்கும் கொள்கையில்லாமல், அரசியலுக்காக சிங்கள எதிர்ப்புவாதத்தின் ஊடாக இரு சமூகங்களையும் ஒதுக்கி வைத்து அதனூடாக தங்களது நலன்களை மாத்திரமே கருத்தில் கொண்டு செயற்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதைக் காணலாம்.

இதன்போது தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காக அல்லது அமைதிபடுத்துவதற்காக அவர்கள் கையில் எடுத்துக் கொண்டுள்ள தந்திரமே தமிழ்த் தேசியம் என்பதாகும். தேசியம் என்பது அது சார்ந்த மக்களையும், அம் மக்களது தேசத்தையும் காப்பதாகும். காப்பது என்பதில் அம்மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்தல் தொடங்கி அனைத்தும் உள்ளடங்குகிறது. ஆனால், தமிழ்த் தேசியம் பேசுகின்ற கூட்டமைப்பு, இதில் எதையாவது இதுவரை செய்துள்ளதா என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழர்களும் தன்னிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் இப் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் கூறுகின்றனர். அது தவறு. முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர். சுரேஸ் பிரேமச்சந்திரன், விஜயகலா, அங்கஜன் போன்றோரை விட அதிக வாக்குகளை கடந்த பொதுத் தேர்தலில் பெற்றவர் சுமந்திரன், சரவணபவன் போன்றவர்களது சூழ்ச்சிகள் காரணமாகவே இவர் தோற்கடிக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

எனவே இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பது தவறான கருத்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சதிகளின் முன்னே தமக்கான இன்னொரு அரசியல் தங்குமிடம் என்ற ரீதியிலேயே இவர்கள் இந்தப் பேரவையை உருவாக்கியுள்ளனர் என்பதே யதார்த்தமாகும். இவர்கள் மாத்திரம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து பேரவையை ஆரம்பித்தால் அது தங்களுக்குத் தோல்வியையே தரும் என்பதால் பிற சிலரையும் இணைத்துக் கொண்டு இந்த பேரவையை ஆரம்பித்துள்ளனர். எனினும் இவர்களது அடிப்படையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும். அதாவது, தமிழர்களது பிரச்சினைகளைத் தீர்க்காமல், அதனைக் குழப்பிக்கொண்டே தமிழர் நலங்கள் சாராத தேசியவாதம் பேசுவதும், தேர்தலுக்கான சிங்கள் எதிர்ப்பும். இந்த விடயங்களில் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட சற்று உரத்தத் தொணியில் பேசக்கூடும் அன்றி இவர்களாலும் தமிழர்களது விடிவிற்காக எதையும் செயற்பாட்டு ரீதியில் முன்னெடுக்க முடியாது.

செயற்பாட்டு ரீதியில் தமிழர்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்குள்ள அதிகாரத்தை வைத்து மாகாண சபை மூலம் இதுவரை தமிழர்களின் எத்தனையோ தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கலாம். அதே நேரம் ஒரு காலத்தில் இவர்கள் தமிழர்களின் ஒடுக்கு முறைக்கும் அழிவுக்குமே காரணமாக இருந்தார்கள். விக்னேஸ்வரன் நீதித்துறை கடமையில் இருந்த போது அரசின் கைக்கூலியாக செயற்பட்டு தமிழ் இளைஞர், யுவதிகள் பலரை சிறையில் அடைத்தவர். இப்போது அத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதால் தமிழர்களின் காவலராகத் தன்னைக் காட்ட முனைகிறார். தனது பிள்ளைகளை சிங்களவருக்கு தாரைவார்த்துவிட்டு இன்று தமிழ்த் தேசியம் பேசுகிறார். சுரேஸ் பிரேமசந்திரன், வன்முறைக் குழுவின் தலைவராக இருந்து பல தமிழ் இளைஞர், யுவதிகளைக் கொலை செய்யக் காரணமாக இருந்தார்.

எனவே இவர்களது வரலாறு, பின்னணி, வழிமுறை என்பவற்றைப் பார்க்கும் போது இப் பேரவையினாலும் தமிழர்களுக்கு எவ்விதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதே திட்டவட்டமாகத் தெரிய வருகிறது.