வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் இடம்பெறுகிறது.

நாட்டின் கடன் சுமையை குறைத்து அபிவிருத்தியை இலக்காக கொண்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று அன்றையதினம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்தில் டெங்கு அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதுடன் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள அதேநேரம், மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போது யாழ். மாவட்டத்தின் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகிவரும் நிலையில், நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுவதனால், இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளதாகவும், குறிப்பாக, மலேரியா நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெற முடியாதுள்ளது எனவும், அந்த மீன் குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது அமைச்சுப் பதவி தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அதிருப்தி

கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியைக் கொண்டு தமிழ் கல்வி முன்னேற்றத்துக்காக, முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு தமக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி தனக்கு வழங்கப்பட்ட போதிலும் இதுவரை பெயரளவுக்கே தான் இயங்கி வருவதாகவும், எந்த அதிகாரங்களையும் அமைச்சு தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே தனக்கு இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும், கல்வியமைச்சரே, சகல அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு செயற்படுவதாகவும், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சராகப் பொறுப்பெற்றது முதல் இதுவரை சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டுமெனக் கருதுவதுதான் பிரச்சினையாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சுப் பதவியை வைத்து என்ன செய்வது. தமிழ் மக்கள், கல்வி ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தன்னிடம் வருகின்ற நிலையில், அவர்களது கோரிக்கைகளை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை எனவும், அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே, தமிழ்க் கல்வி அபிவிருத்திக்குச் செயலாற்ற முடியும். அரசாங்க வர்த்தமானி அறிவித்தல், கல்வி இராஜாங்க அமைச்சுக்குப் பல்வேறு பணிகள் பொறுப்பளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், நாம் எத்தகைய பணிப்புரைகளை விடுத்தாலும் அதிகாரிகள் அதனைச் செய்வதில்லை எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சத்தியக் கடதாசி பெறத் தீர்மானம்

சமூகத்தின் சந்தேகத்தை இல்லாமற் செய்வதற்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், வேறு நாட்டின் பிரஜைகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்கான சத்தியக் கடதாசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 19ஆவது திருத்தத்தின் ஊடாக, வேறுநாட்டில் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கின்ற ஒருவர், இலங்கை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதால், உறுப்பினர்கள் இரட்டை பிரஜைவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை, சத்தியப்பிரமாணம் செய்யும் போதே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுப் பிரஜைகளுக்கான சட்டம், கொள்கையை வழங்குகின்ற மற்றும் எங்களுக்கான நிதி நிர்வாகத்தை செய்கின்ற நிறுவனமே நாடாளுமன்றமாகும். அதில், வெளிநாட்டுப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கின்ற ஒருவர்,இலங்கை மக்களின் நலன்புரிக்காகச் செயற்படுவரா என்றும் வினவியுள்ளார்.

இவ்வாறான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னரே அவருடைய பிரஜாவுரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இன்னும் தீர்மானமில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து, இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லையென கல்வி இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும், தாம் அவரது அழைப்பை நிராகரித்து விட்டதாக  கல்வியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு வருவதாகவும், அரசியல் ரீதியில் சாதகமான வழியையே தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும், யாருடன் இணைந்து போட்டியிட்டால், தமிழ் தரப்புக்கு சாதகமான நிலை ஏற்படும் என்பது தொடர்பில், வியூகம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது, தமது நோக்கமல்ல என்றும், மஹிந்த தரப்பினரும் (பொதுஜன பெரமுன) தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும், அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், தேர்தலில் தனித்து போட்டியிடுவது சிறந்ததாக அமையும் எனவும், எதிர்வரும் இரு வாரங்களில் தமது நிலைபாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிசாரைத் தாக்கிய சம்பவம்; இருவர் கைது

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாக் குழுவினைச் சேர்ந்த 10ற்கும் மேற்பட்ட நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

வாள்வெட்டிற்கு இலக்காகிய இரு பொலிஸாரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் யாழில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆவா குழுவின் முக்கிய நபர்கள் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தமைக்கு அமைவாக, இன்று காலை குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைவிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை

தமது தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுவதாக பெற்றோலிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பெற்றோலிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பெற்றோலிய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு பாலர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள 1856 பாலர் பாடசாலைகளிலும் ஒரேதினத்தில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிரமதானத்தில் பாலர் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 4062 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர், பொலிஸார், முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரையில் கிழக்கில் உள்ள 1856 பாலர் பாடசாலைகளிலும் ஓரே நேரத்தில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை சுத்தம்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடநூல் தவறுகளைத் திருத்த விஷேட குழு!

பாடநூல்களில் தமிழ்பேசும் மக்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் இருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தமிழ் பாடநூல்கள் தயாரிக்கும் உத்தியோகத்தர்களுக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு விஷேட குழு ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மூத்த தமிழ் வரலாற்றுப் பேராசியர்களும், துறைசார் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். வரலாற்றுப் பாடநூல்களில் மட்டுமல்லாமல், தமிழ் பாடம், இந்து சமயப் பாடங்களிலும் பல்வேறு தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின் இறுதியில் தமிழர் வரலாறு மற்றும் தமிழ் பாடங்களை ஆழமாக கற்றறிந்த நிபுணத்துவம் வாய்ந்த 09 பேர் அடங்கிய விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், தமிழர் வரலாறு, தமிழ் மற்றும் இந்து சமயம் ஆகிய பாடப்புத்தகங்களில் காணப்படும் குறைபாடுகளையும், தவறுகளையும் திருத்திக்கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பார்கள்.

இவ்விடயங்கள் தொடர்பாக கடந்த 06 மாதங்களாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சரவையில் மாற்றமில்லை – மஹிந்த அமரவீர

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆளும் அரசாங்கத்தில் பிளவு ஏற்படுவதாகவும், விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படாதெனத் தெரிவித்துள்ளார்.

சிலர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென வெளிப்படையாகவே கோரி வருகின்றனர். எனினும் அது அவசியமற்றது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.