இ.போ.ச பஸ்களுக்கு இரும்புவலை பாதுகாப்பு!

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன.

பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களிலிருந்து பஸ்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சேவைக்குச் சொந்தமான 57 பஸ்கள் மீது கல், போத்தல் மற்றும் இதர பொருட்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (01) இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய சபையினரால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு, அமைச்சர்கள், பொலிஸ் மற்றும் பல தரப்பினருக்கு மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவங்களிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பஸ்களுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுச் செயலர் வருகிறார்

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் அவர் இந்த மாதம் நடுப்பகுதியில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இந்திய தரப்பில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

த.தே.கூவின் ஏனைய கட்சிகளுடனான பேச்சு!

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பில் விரைவில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக அண்மையில் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக ஜனவரி 9ம் திகதிக்குப் பின்னர் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஏனைய அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் அரசியலமைப்பில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விஷேடமாக தற்போது தேசிய அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரசுடன் இரண்டாவது தடவையாகவும் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

 

2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது.

அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத் தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டம் என்பவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 04 இலட்சத்து 50 ஆயிரத்து 153 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ம் ஆண்டு 07 ஆயிரத்து 786 இனால் அதிகரித்து 04 இலட்சத்து 57 ஆயிரத்து 939 வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 79 ஆயிரத்து 86 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 616 இனால் அதிகரித்து 81 ஆயிரத்து 702 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் இணைந்த யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 402 இனால் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வவுனியா நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 695 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 107 இனால் அதிகரித்து, ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 802 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 83 ஆயிரத்து 224 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 731 இனால் குறைவடைந்து 78 ஆயிரத்து 493 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 63 ஆயிரத்து 840 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 329 இனால் அதிகரித்து 67 ஆயிரத்து 169 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆயிரத்து 705 வாக்காளர்களினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நாளை வெளியாகிறது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

 2015 ஆண்டின் க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப்பெறுபேறுகள் அனைத்தும் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் அனைத்தும் அவர்களின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

2016இல் குற்றமில்லாத குடாநாடு – இளஞ்செழியன்

2016 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம் செய்துள்ளதாக யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு யாழ். நீதிமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக்கொண்ட பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரச உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட வேண்டும். உத்தியோகத்தர்கள் கடமைகளில் கரிசனையும் செலுத்த வேண்டும். நீதிச் சுதந்திரம் மிக முக்கியமானது, அந்த கடமையினை அனைவரும் இணைந்து செய்துகொள்வோம். யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள மாவட்டமாக மாற வேண்டும். போதை வஸ்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற வேண்டும். பாடசாலை மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாறவேண்டும்.பெண்களை பாதுகாக்கும் மாவட்டமாக மாறட்டும், ரவுடித்தனம், காடைத்தனம் அழிக்கப்படும் மாவட்டமாக மாறட்டும்.

இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் அனைத்து குற்றச்செயல்களையும் ஒழித்து, சமாதானமான, சுதந்திரமான யாழ். குடாநாட்டினை உருவாக்குவதற்கு, நீதித்துறை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நீதித்துறை உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்பு மிக முக்கியமானது, நீதிபதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை மதிக்கின்ற உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும்.

அதற்கும் மேலாக, நீங்கள் வாழும் இடம் நீதி தேவன் ஆலயம். அதை மறந்துவிடக் கூடாது. நீதி தேவன் ஆலயத்தில் வாழும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தர்களும், நீதி தேவனுக்கும், நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர்களாகவும், நீதிக்கு தலை வணங்குபவர்களாகவும் இருக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு யாழ்.குடாநாடு சுபீட்சமான குடாநாடாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை – நியூஸிலாந்து போட்டி கைவிடப்பட்டது

இலங்கை – நியூஸிலாந்துக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி டெஸ்ட் தொடரை 2-0 என நழுவவிட்டது.

இதனையடுத்து ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை இடம்பெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் நியூஸிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. இதன்படி 2-1 என நியூஸிலாந்து முன்னிலையில் இருக்க, இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நெல்சன் சேக்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டி மழை காரணமாக சில மணிநேரங்கள் தாமதித்தே ஆரம்பமாகிய நிலையில், 50 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்ட இந்த ஆட்டம் 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் நியூஸிலாந்தைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. எனினும் அந்த அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ.போ.ச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடபகுதியில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவது மற்றும் அரச பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள் தாக்கப்படுகின்றமை போன்ற சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே ஆங்கில புத்தாண்டு தினமான இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க, பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்குப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிசார் முன்னெடுத்துவரும் நிலையில், இன்றைய தினம் இபோ.ச யாழ். சாலை ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிர்வாக சேவை விண்ணப்பங்கள் கோரல்!

 இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள 852 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன.

219 வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாகவும் 515 வெற்றிடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலமாகவும், 118 வெற்றிடங்கள் இலங்கை அதிபர் சேவையில் உள்ளவர்களில் சேவை மூப்பு மூலமாகவும் நிரப்பப்பட உள்ளது.

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு அந்த சேவையைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைய அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களை தவிர்த்து கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை உரிய பதவிகளில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியென அறிவிக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டிற்குள் கடல்நீர் கலக்கும் அபாயம்!

 யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் யாழ். குடாநாடு, கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதெனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் வட மாகாண மக்களைத் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பூகோள ஒழுங்கின்மை காரணமாக, யாழ். குடாநாடு கடலால் கழுவிச் செல்லப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள ஐங்கரநேசன், இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கொள்ளும் வழிமுறையொன்றை உடனடியாக தேட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வட மாகாணசபையில், ஐங்கரநேசனால் வெளியிடப்பட்ட இந்த கருத்து தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் முன்னாள் வேந்தரும் புவிச்சரிதவியல் பேராசிரியருமான செனவி எப்பிடவத்தவிடம் விசாரித்த போது, ‘யாழ்ப்பாணம் எதிர்நோக்கும் இந்த ஆபத்து, தற்போது ஆரம்பமாகிவிட்டது’ எனக் குறிப்பிட்டார். ‘யாழ்ப்பாணம் முழுவதும் காணப்படும் சுண்ணாம்புக் கற்கள், கடல் நீரில் கரைந்து செல்வதால் பாரிய அருவிகள் தோன்றி, சாதாரண நீர் அனைத்தும் கடல் நீருடன் கலந்துவிடும். இதனால், நிலத்துக்கடியில் உள்ள நீரை மக்கள் எந்தளவுக்கு பயன்படுத்துகின்றனரோ அதைவிட மேலதிகமாக, கடல்நீருடன் குடிநீர் கலந்துவிடும்’ என்றும் இவர் தெரிவித்தார்.