எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து, இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லையென கல்வி இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும், தாம் அவரது அழைப்பை நிராகரித்து விட்டதாக கல்வியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு வருவதாகவும், அரசியல் ரீதியில் சாதகமான வழியையே தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும், யாருடன் இணைந்து போட்டியிட்டால், தமிழ் தரப்புக்கு சாதகமான நிலை ஏற்படும் என்பது தொடர்பில், வியூகம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது, தமது நோக்கமல்ல என்றும், மஹிந்த தரப்பினரும் (பொதுஜன பெரமுன) தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும், அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், தேர்தலில் தனித்து போட்டியிடுவது சிறந்ததாக அமையும் எனவும், எதிர்வரும் இரு வாரங்களில் தமது நிலைபாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.