தீ விபத்தில் நஷ்டமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு – வடக்கு ஆளுநர் உறுதியளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் தீர்வு காணப்படாமலிருந்த காணி பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த மக்களின் காணிப்பிணக்குகளை ஆராயும் கூட்டம் நேற்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கரைச்சி, கண்டாவளை, பளை, பூநகரி பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களின் காணிப்பிணக்குகளை ஆளுநரிடம் தெரிவித்த போது, சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன் சில காணிப் பிணக்குகளுக்கு ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்ட அதேவேளை, ஜனவரி மாதம் மீண்டும் கிளிநொச்சிக்கு விஐயம் செய்து குறித்த காணிப் பிணக்குகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ஆளுநர் உறுதி தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநருடன் மாகாண காணி ஆணையாளர் மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட மேலதி அரச அதிபர் சத்தியசீலன் மற்றும் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் நண்பகல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் மற்றுமொரு கூட்டம் நடைபெற்ற போது, கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுடன் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கலந்துரையாடினார்.

இரண்டு வாரங்களில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்;படவுள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்டத்திற்குத் தீயணைப்பு வாகனம் வழங்கப்படும் என்றும், சந்தை கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *