தமிழர் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத டக்ளஸ் எம்.பியின் பெயர்!

தமிழ் வரலாற்றுப்பாட புத்தகங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டுமிருப்பதாகவும் அதிகாரிகள் இது விடயத்தில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் பாராளுமன்றத்தில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியால் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும் என்ற வகையில், டக்ளஸ் தேவானந்தா சபையில் எழுப்பிய கேள்வி வரவேற்கப்பட வேண்டியதே.

இன்றைய காலகட்டத்தில்கூட சிறுபான்மை இனத்தவர்களின் வரலாறுகள் அழிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எம்மக்கள் மத்தியில் நிலவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில், 2017ம் ஆண்டுக்கான இலவச பாடநூல்களில் தரம் 6,7,8.9,10 என்பவற்றுக்கான வரலாற்றுப் புத்தகங்களில் தமிழ் பேசும் சமூகங்களின் வரலாறுகள் புறக்கணிப்புச் செய்யப்பட்டிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சுமத்தியதுடன், உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் துரிதமாகச் செயற்பட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்டோர் தலைமையில் தமிழ் அறிஞர்கள், விரிவுரையாளர்கள், உயரதிகாரிகளின் பங்களிப்புடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி, தமிழ்ப் பாடநூல் ஆக்கப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் அதிகாரிகள், நூல் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பவர்களாக இல்லாமல் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்புச் செய்கின்றவர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்புநோக்குச் செய்கின்றவர்களாகவுமே கடமையாற்ற முடிகின்றதாலும், துறைசார்ந்தவர்கள் போதுமான வகையில் அங்கு கடமையில் அமர்த்தப்படாததுமே இவ்வாறான தவறுகளுக்கும், புறக்கணிப்புக்களுக்கும் காரணம் என்னவென ஆராயப்பட்டதுடன், அந்தக் குறைபாடு அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களை தயாரிக்கும் பொருட்டு பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர்களுக்கு எழுத்து மூலம் பாடவிதானம் தொடர்பில் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்கப்பட்ட போதிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது ஒத்துழைப்போ பங்களிப்போ கிட்டவில்லையென கல்வித் திணைக்கள அதிகாரிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இனங்களின் வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாளை இந்த நாட்டில் பிறந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களை வரலாறு இல்லாத சமூகங்களாக திரிபுபடுத்தும் தீயசக்திகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் துணை போகக்கூடியதாக அமைத்து விடலாம்.

அந்த வகையில் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் சமுகங்கள் எதிர்நோக்கவிருந்த வரலாறில்லாத சமுகம் என்ற அவச்சொல்லிலிருந்து மீட்டெடுப்பதற்கான பெரும் கைங்கரியத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா செய்துள்ளதுடன், தமிழ் பேசும் சமூகத்தின் மீதான தனது கடமையும், தமிழர்களுக்கான சிறந்ததொரு முகவரியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பையும் அவர் சரிவரச் செய்திருக்கின்றார். இந்த விடயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனின் சமயோசித நடவடிக்கைகளும் பாராட்டப்பட வேண்டும்.

பாடசாலைகளில்தான் எமது எதிர்கால பரம்பரைக்கு எமது வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும். அதனைச் செய்யத் தவறினால் அவர்கள் வரலாற்றில்லாத சமூகங்களாக, எடுப்பார் கைப்பிள்ளைகளாக, நாடற்றவர்களாகக்கூட ஆகிவிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் எனவே, இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இனிமேலாவது கண்விழிக்க வேண்டும்.

விடுதலைப் புலித் தலைமையால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த அரசாங்கத்தால் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழ் மக்களின் கையறுநிலையை சாதகமாகப் பயன்படுத்தி ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமது பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர்.

குறிப்பாக, கடந்தகால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, உறவுகளை, உடமைகளை இழந்த நிலையில் வாழ்ந்து வந்த மக்களிடம், உறவுகளை மீட்டுத் தருகின்றோம், அரசியல் உரிமையைப் பெற்றுத் தருகின்றோம், மக்களின் சொந்த நிலங்களை மீட்டு, மீள்குடியேற்றுகின்றோமென பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், இவற்றில் எந்தவொரு விடயத்தையும் இன்று வரை நிறைவேற்றவில்லை. மாறாக இன்று பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வைப் பெற்றுக் கொள்வது என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய காலச்சூழலை எடுத்துக்கொண்டால், தற்போது ஆட்சியிலுள்ள இந்த அரசாங்கத்தைத் தாமே கொண்டு வந்ததாகத் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் போன்ற பதவிகளையும் இவர்கள் வகித்து வருகின்ற போதிலும், தமிழ் மக்களின் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் மென்மையானதொரு பார்வையைச் செலுத்தி வருகின்ற நிலையில், தமிழர் விடயத்தில் எந்தவித முன்னகர்வுகளையும் மேற்கொள்ளாமலேயே இருந்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளின் செயற்பாடுகள் இவ்வாறாக இருந்தாலும், தமிழ் மக்கள் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை சரியாகப் புரிந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துவரும் முயற்சிகள் கவனிக்கப்பட வேண்டியவையே.

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான அடையாளத்தை வழங்கி, உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் அவரின் பங்களிப்பு மிகமுக்கியமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் மன்னர்களின் வரலாற்றை எமது இளம் சந்ததியினரும், எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்வதற்காக மன்னர்களின் சிலைகளை யாழ். நகரில் நிறுவியுள்ளதுடன், இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களின் பெரும் பகுதிகளை விடுவிப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு, குறித்த காணிகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததில் டக்ளஸ் தேவானந்தாவின் பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்திருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.

இன்று வரலாற்றுப்படப் புத்தகத்தில் தமிழர் வரலாறுகளை உள்ளடக்கி, தமிழர்களுக்கான அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை என்பது டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சிகளுக்கான அங்கீகாரமே.

இதேபோன்று, நாளைய எதிர்காலத்தில் எமது இளைய சந்ததியினர் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதை வலியுறுத்துகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *